கனடாவில் கடந்த 2020 ஆம் வருடத்தில், துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு ஹங்கேரி தலைநகரில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கனடாவில் உள்ள ஹாமில்டன் என்ற நகரத்தில் Tyler Pratt என்ற 39 வயது நபர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியின் வயிற்றில் சுட்டுள்ளார்கள். இதில் கருவிலிருந்த அவர்களின் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதியன்று நடந்துள்ளது.
கனடாவில் கோடீஸ்வரரின் மகளும், இணையதளங்கள் மூலம் பிரபலமானவருமான 25 வயது பெண் Yun ‘Lucy’ Lu Li மற்றும் அவரின் காதலர் Oliver Karafa இருவரும் தான் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினர் வருவதற்கு முன்பாக இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர்.
மேலும், கனடா நாட்டை விட்டு வெளியேறி ஒரே நாளில் பல்வேறு நாடுகளைத் தாண்டி ஹங்கேரியின் தலைநகர் புதாபெஸ்டில் தலைமறைவானார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஹங்கேரி காவல்துறையினரிடம் இருவரும் மாட்டிக் கொண்டார்கள். இருவரின் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருவரும் கனடாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்கள். காவல்துறையினர், இந்த இருவருக்கும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர். எனினும் அவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதற்காக சுட்டார்கள்? என்பது தொடர்பான தகவல்களை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.