இணையதளங்களில் ஆபத்தாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு பிரபலமான ஒரு அழகி செல்பி எடுக்க முயற்சித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த Sophia Cheung என்ற 32 வயது பெண், இணையதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் ஹொங்ஹொங்கில் வசித்து வந்திருக்கிறார். Sophia மலை உச்சி போன்ற ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வழக்கமாக பதிவிட்டு வருவார்.
தற்போது அதே போன்று ஹொங்ஹொங்கில் இருக்கும் Ha Pak Lai park என்ற பகுதியின் நீர்வீழ்ச்சியின் முன்பு நின்றுகொண்டு ஒரு செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராமல் கால் தவறி அவரின் நண்பர்கள் இருக்கும் போதே சுமார் 16 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்.
உடனடியாக மருத்துவ உதவி குழுவினர் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இவரை இணையதளங்களில் 35 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். தற்போது செல்பி எடுக்க சென்று பலியான நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்.