Categories
பல்சுவை

விடுதலை போராட்டத்தில் பங்கேற்று… நாட்டிற்காக உயிர் தியாம் செய்த வீர மங்கைகள்…!!!

இந்திய விடுதலைப் போராட்டத்தில், கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்து, உயிர் தியாகம் செய்த சில  முக்கிய வீர மங்கைகள் குறித்து பார்ப்போம்.

முதலாவதாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த உஷா மேத்தா, தன் 8 வயதில், 1928-ஆம் வருடத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான  போராட்டத்தில் கலந்துகொண்டு ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கமிட்டவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்களுடன் இணைந்து  ‘காங்கிரஸ் ரேடியோ’ என்னும் வானொலி ஒலிபரப்பை ரகசியமாக நடத்தி, அதற்காக சிறைக்குச் சென்று, 1946-ஆம் வருடத்தில் வெளியில் வந்தார்.

அடுத்ததாக, துர்காவதி தேவி: 1907-ஆம் வருடத்தில் வங்கத்தில் பிறந்த இவர் ஆயுதமேந்தியப் போராட்டத்தில் ஈடுபட்டார்ர். 1928-ஆம் வருடத்தில், பிரிட்டிஷ் அதிகாரியான ஜான் பி.சாண்டர்ஸைக் கொலை செய்த பிறகு பகத் சிங், ராஜகுரு போன்றாரை காவல் துறையிடமிருந்து தப்பிக்கச் செய்தவர். மேலும், ஹெய்லி பிரபுவைக் கொலை செய்ய முயற்சித்து 3 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

சுனிதி செளத்ரி மற்றும் சாந்தி கோஷ் இருவரும் வங்கத்தில் கொமில்லா மாவட்ட மாஜிஸ்திரேட் சார்லஸ் ஸ்டீவன்ஸை 1931-ஆம் வருடத்தில் சுட்டுக் கொன்று விட்டு சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். அப்போது, சுனிதிக்கு 14 வயது மற்றும் சாந்தி கோஷிற்கு 15 வயது. அதன்பிறகு, 1942-ஆம் வருடத்தில் காந்தியின் சிபாரிசில் இருவரும் வெளிவந்தனர்.

மங்களூருவில் பிறந்த கமலாதேவி சட்டோபாத்யாயா 1919ஆம் வருடத்தில் 16 வயது சிறுமியாக இருந்த போது, கணவரை இழந்து விதவையானவர். அப்போதைய காலகட்டத்தில் சமுதாயத்தின் கடும் எதிர்ப்பை மீறி, கலைஞரான ஹரீந்திரநாத்தை திருமணம் செய்துகொண்டு லண்டனில் குடியேறினார். காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தால்’ கவரப்பட்ட அவர், மீண்டும் தாய்நாட்டிற்கு வந்து, காந்தியின் சேவாதளத்தில் சேர்ந்தார். மேலும், உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை தண்டனை அனுபவித்தார்.

அசாமில் 1924-ஆம் வருடத்தில் பிறந்த கனகலதா பரூவா, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்ற நடந்த ஊர்வலத்தில் முன்னிலையில் இருந்தார். அப்போது காவல்துறை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் தன்  18 வயதில் மரணமடைந்தார்.

1885-ஆம் வருடத்தில் அசாம் மாநிலத்தில் பிறந்த போகேஸ்வரி ஃபுக்கானனிக்கு, எட்டு பிள்ளைகள். அகிம்சை வழியிலான போராட்டங்களில் தீவிரமாக களமிறங்கினார். 1942-ஆம் வருடத்தில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில், ஒரு காவலர் தேசியக் கொடியை அவமதித்ததால் அவரை கொடிக்கம்பால் தாக்கிய போகேஸ்வரியை, காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

1909-ஆம் வருடத்தில் ஹரியாணா மாநிலத்தில் பிறந்த அருணா ஆசஃப் அலி, 1930-ஆம் வருடத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தார். 1942-ஆம் வருடத்தில், ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி அன்று, பம்பாய் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, அனைத்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாளே, அதே மாநாட்டில் காங்கிரஸின் கொடியை ஏற்றி, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை தொடங்கினார். இதனால், அருணா ஆசஃப் அலியை ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி’ என்று அழைத்தனர்.

 

 

Categories

Tech |