தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி உள்ளார்.
அதனால் அஜித் கையில் உள்ள கத்தியைப் பிடுங்கி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தப்பிச் சென்று சரண் அடைந்துள்ளார். பின்னர் காவல்துறையினரிடம் தன்னிடம் அத்து மீறி நடக்க முயன்றதால் குத்தி கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த கத்தியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
வழக்கமாக கொலை சம்பவம் நிகழ்ந்து விட்டால் காவல்துறையினர் 302வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்வது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த இளம்பெண் குத்தியதால், இதை கொலை சம்பவங்களாக கருத இயலாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அப்பெண்ணை கைது செய்யாமல் விடுவித்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வழக்கு செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மாற்றி தற்காப்புக்காக நடந்த கொலை சம்பவம் என்று இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவியாக கொலை செய்துள்ளாதாக நீதிமன்றத்தில் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.