தற்கொலை செய்து கொண்ட மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளர்களான பாஸ்கர் – தனசேகரி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கோகுலபிரியன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகவே அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி குணமடையவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனசேகரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் தனது மனைவியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது பாஸ்கரின் மீதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தம்பதியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் எந்த பலனுமின்றி கணவன் – மனைவி இருவரும் அடுத்தடுத்த பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.