ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் திமுக பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடந்தபோது 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அன்புமணி மற்றும் 6 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சங்கீதா ஆகியோர் எங்கள் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் ஒன்றிய குழுத்தலைவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் பாரபட்சம் பார்க்கிறார் என்று அவர் மீது குற்றம்சாட்டி கூட்டரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து 4 வது வார்டு திமுக கவுன்சிலர் நாகலட்சுமி தங்கள் வார்டுகளில் குடிநீர் கட்டணம் உயர்ந்துள்ளது. இதை குறைக்க வலியுறுத்தி பேசியுள்ளார். அப்போது அவருடைய கோரிக்கையை அதிகாரிகளோ தலைவரோ யாரும் செவிசாய்க்கவில்லை என்பதால் அவர் திடீரென்று கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இந்தக் கூட்டம் நடந்து முடிந்த பின்பு ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது “நிதி ஒதுக்கீட்டில் எந்த பாரபட்சமும் யாருக்கும் இல்லை” என்று அவர் விளக்கமாக கூறியுள்ளார்.