மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமராபுரம் பகுதியில் முத்துமாலை என்பவர் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துஜோதி என்ற மகன் உள்ளார். இவர்கள் தினமும் தனது சொந்த ஊரான கோவில்பட்டியிலிருந்து குடும்பத்துடன் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு செல்ல கம்பெனியை பூட்டுவதற்காக காவலாளி அறைக்கு சென்று சாவியை எடுப்பதற்காக அன்னலட்சுமி சென்றுள்ளார். அப்போது அறையின் கதவை திறந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அன்னலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அன்னலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அன்னலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.