சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்குழுவின் அமைப்பாளர் கலாவதி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளான லில்லி புஷ்பம், தெய்வானை, ஈஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறியுள்ளனர்.
அதில் கேஸ் விலை கடந்த 7 மாதங்களில் 250 ரூபாய் வரை அதிகரித்திருப்பதாகவும் கடும் விலை உயர்வால் ஏழை குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கேஸ் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கோஷம் எழுப்பினர்.