சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான நிலையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன் பின் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களிடம் அங்கிருந்த அலுவலர்கள் குடிநீர் வினியோகம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.