தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பப்பரப்பா என்ற பெண் மனு கொடுப்பதாக கூறி உள்ளே நுழைந்துள்ளார். நுழைவுவாயிலில் காவல்துறை அதிகாரிகள் அவரது பையை சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார், நான் மகளிர் சுய உதவி குழுவில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2011 ஆம் ஆண்டு குழுவிற்கு செலுத்த வேண்டிய ரூ2,10,000 சத்தியமூர்த்தி பஜாரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன் ஆனால் அவர் கொடுக்காமல் அதை அபகரித்து கொண்டார். இதையடுத்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அங்கு வந்த அந்தப் பெண் வெறும் ஐம்பதாயிரம் தான் வாங்கினேன் என்று கூற நீதிமன்றத்தை அணுகி பணத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினேன்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் சூழலில் கடந்த டிசம்பர் மாதம் அப்பெண் தன்னை மர்மநபர்களை வைத்து தாக்கி நீதிமன்றத்திலிருந்து வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டினார். நான் மீண்டும் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அந்த பெண்ணிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் மிகுந்த துணிச்சலோடு என்னை மென்மேலும் மிரட்டி வருகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறவே மனு கொடுக்க வந்தேன் என்று அவர் தெரிவிக்க, அவரை சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.