லாரியை சிறைபிடித்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெரு அமைந்துள்ளது. அந்த வழியாக வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் இருக்கும் சிமெண்டு குடோனிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் பானுநகர் நடுத்தெருவின் வழியாக வருவது வழக்கமாக இருந்துள்ளது.
தற்போது லாரிகள் இந்த வழியாக தொடர்ந்து செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகம் அடைந்துள்ளன. இதனால் பழுதடைந்த சாலையை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என பெண்கள் அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.