Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WomensAsiaCup2022 : அரையிறுதியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…!!

ஆசியக்கோப்பை அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..

8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் கத்துக்குட்டி அணியான தாய்லாந்து அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர்.. ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் ஆட்டம் இழந்த போதிலும், ஷபாலி வர்மா அதிரடியாக 28 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் பட 42 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார்.

அதன்பின் தங்களது பங்கிற்கு ஜெமிமா 27 ரன்களும், ஹர்மன் பிரீத் கவுர் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மேலும் ரிச்சா கோஷ் 2, தீப்தி சர்மா 3 ரன்களும் எடுத்தனர். கடைசியில் பூஜா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது..

இதையடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் நருேமோல் சாய்வாய் மற்றும் நாட்டாய பூச்சதம் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்தனர்.. இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளும், ரேணுகா சிங், சினே ராணா,ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது..

 

Categories

Tech |