நாமக்கல் மாவட்டத்தில் அட்டை மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞன் மின்சாரம் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சுண்டபனை பகுதியில் அட்டை மில் இயங்கி வருகின்றது. அந்த மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜை குமார்(20) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்போனை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு சார்ஜில் இருந்த போனை எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக ரஞ்ஜை குமார் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு பரமத்திவேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் ரஞ்ஜை குமார் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.