கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வக உபகரணங்கள் தனி வார்டுகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக இந்த தொகை வழங்கப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது. அவரச கால உதவி முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் என உலக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தூண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 1 ம் தேதி மாலை 4:30 மணி தொடங்கி, ஏப்ரல் 2ம் தேதி மாலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் புதிதாக 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.