உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் என அனைவருக்கும் ஒமிக்ரான் பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக பலன் அளிப்பதாக சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் நோய் தொற்றுக்கு எதிராக திறம்பட செயல்படும். இருப்பினும் இணைநோய், நபரின் வயது ஆகியவற்றை பொறுத்து தடுப்பூசியின் ஆற்றலானது மாறுபடக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் தகவல்களும், சான்றுகளும் தற்போது தான் படிப்படியாக கிடைக்க தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் தேவை அதிகரிக்காததும், படுக்கைகள் நிரம்பாததும் நல்ல அறிகுறியே என்று கூறியுள்ளார்.