தாய் மொழியைப் போற்றும் விதமாக பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என போற்றப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட பெருமை தமிழனுக்கே உண்டு. ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. பல மொழிகள் அழிந்தும் சில அழிந்து கொண்டும் உள்ள நிலையில் அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவவும் யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தாயில்லாமல் நாமில்லை இந்தியா பல மொழிகள் பேசப்படும் நாடு. இதில் 23 சதவீதம் மக்கள் தமிழ் உள்ளடக்கிய திராவிட மொழியையே பேசுகின்றனர்.
மேலும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக உள்ள 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு தமிழ்நாடு. எவ்வளவு மொழி படித்தாலும் உணர்வுகள் முழுவதையும் தாய்மொழியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. கிரேக்கம் லத்தின் உள்ளிட்ட மொழிகள் அடங்கிய இந்த பட்டியலில் நமது தாய்மொழி தமிழுக்கு சிறப்பான இடம் உண்டு.
தொன்மையான மற்றும் பழமையான மொழிகள் பல அழிந்த நிலையில் நம் தாய்மொழி தமிழ் இப்பொழுதும் காலத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொண்டு இளமையுடன் திகழ்கின்றது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கி பெருமை சேர்த்தது. தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது என்பது பழமொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம் தாய்மொழியை போற்றுவோம்.