கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நாளை கொண்டாட இருக்கும் செவிலியர் தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் வகையில் உலக செவிலியர் அமைப்பு 1965ஆம் ஆண்டிலிருந்து மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகின்றது. இந்த வருடம் உலக சுகாதார செவிலியர் தினத்தில் “செவிலிய பணி மூலமாக உலக ஆரோக்கியம்” எனும் மையக் கருத்தை உலக செவிலியர் அமைப்பு முன்னிறுத்தி உள்ளது.
தற்போது கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் செவிலியர்களின் பணி போற்றுதலுக்கு உரியதாக மாறியுள்ளது. கிராமப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் சுகாதார செவிலியர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வரை அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற மருத்துவ பணியாளர்களின் அயராத சேவையை பாராட்டும் வகையில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டு மக்கள் விளக்கு ஏந்தியும் கை தட்டியும் அவர்களுக்கு கௌரவம் செலுத்தினர். சமீபத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்னை அரசு மருத்துவமனை. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை போன்றவைகளின் மீது மலர்தூவி கௌரவம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து நாளை கொண்டாடப்படும் உலக செவிலியர் தினம் வழக்கத்தைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைய இருக்கின்றது.