உலகில் உள்ள இயற்கை வளங்களில் மாபெரும் சக்தியாக விளங்குவது இந்த கடல்வளம். இந்தியாவை தீபகற்பம் என்று கூற வைக்கும் அளவுக்கு மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்வளம் அனைத்து உயிர்களுக்கும் பேராதாரம். ஆக்சிஜன், உணவு, மருந்து, காலநிலை மாற்றம் ஆகியவற்றை அளிப்பதில் கடல் பெரும் பங்காற்றுகிறது. இந்த கடல் சக்தியை இன்று மனிதர்கள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அனைவருக்கும் தலைகுனிவு தான்.
கடலுக்கு அடியில் பல்லுயிர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று பல கோடி டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன.இதனால் கடல் வாழ் உயிரினங்களும் கடலின் இயல்பும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தொடர்ந்து கடலை மாசுபடுத்தி வந்தால் எண்ண முடியாத பேரழிவுகளை சந்திக்க நேரிடும் அபாயநிலை ஏற்படும். கடல் வளங்கள் மனிதனுக்கு மட்டும் ஆனவை அல்ல.
அதில் கோடான கோடி உயிரினங்கள் வாழ்கின்றன.அதனால் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை உலக மக்கள் அனைவரிடமும் வலியுறுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதி சர்வதேச பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐநா இந்த பெருங்கடல் தினத்தை அங்கீகரித்தது.