Categories
பல்சுவை

“WORLD STYLE DAY” சினிமா முதல் அரசியல் வரை…… என்றும் எதிலும் SUPER STAR….!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில்  காணலாம்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான  பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

பிறப்பும், நடிப்பும்:

ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகாவில் ராமோஜிராவ் ராமாபாய் ஆகிய தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். அவரது ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

நடிப்பு ஆர்வம்:

இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது. நடிக்கும்  ஆர்வத்துடன் சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

சினிமா வாழ்க்கை :

1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு ஒரு சிறந்த நடிகராக அவரை அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்க தொடங்கினார்.

பில்லா போக்கிரி ராஜா முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் அவரை  ஒரு அதிரடி நாயகனாக மாற்றியது. தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகான் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன் மனிதன் தர்மத்தின் தலைவன் போன்ற பொழுதுபோக்கு படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை பாட்ஷா படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா திரைப்படம் சில இடங்களில் வெற்றி பெறவில்லை எனினும் அவர் நடித்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்திற்கும்   2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2010ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் அதிரடியும் நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்கள் ஆக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியோர் வரை ரசித்து பார்க்கக்கூடிய படம் என்றால் அது ரஜினி காந்த் படமாக கண்டிப்பாக இருக்கும். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் வங்காள மொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 179 திரைப்படங்களை ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர் களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இல்லற வாழ்க்கை:

1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் லதாவை திருமணம் செய்தார். ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளை நடிகர் தனுஷுக்கும், 2வது மகளை தொழிலதிபருக்கும் திருமணம்  செய்து வைத்தார் ரஜினி. இவருடைய திருமணமும் காதல் திருமணம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு என்பதே ரஜினியிடம் கிடையாது.

அரசியல் வரை:

1990களில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெறி சுற்றியிருந்தது. 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கருத்துக் கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களில் ஒன்றாக பரவலாக கூறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தனது வாக்கு அளித்ததாக அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப்போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும் ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமல் இருந்து வந்தார். ஆனால் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார் அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. எந்திரன் படத்திற்கு பிறகு அறிவிப்பதாக கூறினார்.

லிங்கா பட இசை வெளியீட்டின்போது அரசியலுக்கு வரவேண்டும் என இருந்தால் வருவேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மற்றொருமுறை ரசிகர்களை  சந்திக்கையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இன்னும் திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினி தர்பார் படத்தை நிறைவு செய்துள்ளார். இந்த படத்திற்கு மிகுந்த அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Categories

Tech |