உலக மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று (டிசம்பர் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பாக ‘அனைவருக்குமான மெரினா கடற்கரை அனுபவம்’ என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை சென்று அலைகளில் கால்களை நனைத்து மகிழும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை சாலையிலிருந்து கடல் வரை தற்காலிக பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது வாகனங்கள் மூலமாகவும், சக்கர நாற்காலிகள் மூலமாகவும் பிறரது உதவியில்லாமல் கடலுக்கு அருகில் சென்றனர். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 8 லட்சம் செலவில் மணலில் இயங்கும் நான்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் கடலில் இறங்கி அலைகளைத் தொட்டு மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகள் கடலை பாதுகாப்பான வகையில் ரசிக்க உதவினர்.
அங்கு வந்திருந்த மாற்றுத் திறனாளியான அயூப் அலி, குடும்பத்துடன் கடற்கரைக்கு வரும் சமயங்களில் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் வெளியே நிற்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது குழந்தைகளுடன் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்று மாற்றுத் திறனாளிகள் கடலுக்கு வந்து செல்லும் வகையில் நிரந்தர பாதை அமைத்தால் நன்றாக இருக்கும்” என தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கவிதா ராஜகோபாலன் என்பவர் தனது மாற்றுத் திறனாளி மகளை கடலுக்கு அழைத்து வந்திருந்தார். அவர் பேசுகையில், “மிகச் சிறய வயதில் எனது மகளை நான் கடலுக்கு தூங்கி வந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் அவள் அலையை ரசிக்கிறாள். அவளைப் போன்று பலரும் மகிழ்ச்சியாக உள்ளதைப் பார்க்க முடிகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் இருக்கும் ஊனமுற்றோர் உரிமை இணையத்தைச் சேர்ந்த ஸ்மித்தா பேசுகையில், “தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று, அவர்கள் தண்ணீர் வரை சென்று பார்க்கும் வகையில் பாதை போடப்பட்டுள்ளது. இதனை நிரந்தரமாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.சட்டப்படி பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையில்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் தடை உள்ளது.
கடற்கரை மணலில் மாற்றுத் திறனாளிகள் செல்வது கடினம், சக்கர நாற்காலியாலும் செல்ல முடியாது. மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தரமாக சிறப்பு பாதை அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பணியாற்றி வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்ற பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற பாதை கிடைத்துவிடும்” என்று கூறினார்.
சென்னை மாநகராட்சி சார்பாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக இந்த தற்காலிக பாதை மற்றும் சக்கர நாற்காலி ஆகியவை மேலும் ஒரு வாரம் வரை நீட்டிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.