வியட்நாமில் தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வைரஸ் பரப்பிய நபருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதனிடையே வியட்நாம் நாடும் இந்த விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவ தொடங்கியுள்ளது. இந்தத் புதிய தொற்று குறித்த விசாரணையில் டாவோ துய் துங்(32) என்ற இளைஞர் லாவோல் (Laos) நாட்டிலிருந்து வியட்நாம் வந்ததை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மற்றவருக்கு வைரஸை பரப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும் லாவோஸ் நாட்டில் டாவோக்கு நெருக்கமானவர்களுக்கும் தொற்று இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டாவோக்கு விதிகளை மீறிய குற்றத்திற்காகவும், வைரஸ் பரப்பிய குற்றத்திற்காகவும் 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.