யோகாசனம் குறித்து இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது.
இந்தியாவில் பதஞ்சலி முனிவர் மூலமாக தோன்றி அவரின் வழிவழியாக தற்போது வரை நாம் யோகா கலையை பயன்படுத்தி வருகிறோம். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும், நிலைகளையும் குறிக்கும். யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகும். “யோகா என்றால் அலையும் மனதை ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் ஆகும்.
ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.
யோகாசனம்= யோகா+ஆசனம்
அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர்.
மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது.
இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.