கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோயம்புத்தூரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 846 சபைகள் அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்படுகிறது. அதன் பிறகு நகர சபை கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் நகர சபை கூட்டங்களின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 12 மாதங்களில் 6 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், கோவையில் 25 ஆயிரம் மனுக்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து முதல்வர் வரலாற்று சிறப்புமிக்க பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இங்குள்ள 10 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தாலும், நம்முடைய முதல்வர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறினார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.
24 மணி நேரமும் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. மின்சார வாரியமும் தயாராக இருக்கிறது. பாஜக கட்சியின் மாநில தலைவர் அரசியல் கோமாளி பற்றிய கேள்விகளை என்னிடம் தவிர்த்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அவர். டிவிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது. நாங்கள் அந்த கோமாளி சொன்னது போல் ஏதாவது கருத்தை சொல்லி இருக்கிறோமா என்றார். மேலும் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்று கூறினார்.