உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் உயிரிழப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் பசி கொடுமையை அனுபவித்து வருவதாகவும், ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் மரணிப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி 15 ஆயிரத்து 840 பேர் ஒரு நாளைக்கு உயிரிழப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் 52 லட்சம் மக்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு சூடான், எத்தியோப்பியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பசியால் மக்கள் அதிக அளவில் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நாட்டில் அடிக்கடி ஏற்படும் ராணுவ மோதல் காரணமாக உணவில்லாமல் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக மக்கள் பட்டினி கிடக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகளில் வீசப்படும் குண்டுகள் ஒவ்வொன்றும் கால்நடைகள் மற்றும் பயிர்களை அழிப்பதாகவும், இதன் காரணமாக உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் தண்ணீர் பற்றாக்குறை, பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றின் காரணமாக உயிரிழப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.