சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,172ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 12,82,042 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,69,451 லட்சம் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,36,851 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9,620 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அதிகபட்சமாக 15,887 பேர் உயிரிழந்த நிலையில் ஸ்பெயினில் 13,055 பேர், பிரான்சில் 8,078 பேர், பிரிட்டனில் 4,934 பேர், சீனாவில் 3,331 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.