உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று பரவியுள்ளது. குவைத்தில் 3 பேரும், ஓமனில் 2 பேரும் பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஒருவரும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஈரானுடனான எல்லைகளை தற்காலிகமாக மூடிவிட்டன. ஈரான் நாட்டில் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.