உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50,239 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,239 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 3,047 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9,80,519 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,06,264 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக இதுவரை கொரோனா வைரசால் இத்தாலியில் 13,915 பேரும், ஸ்பெயினில் 10,003 பேரும், அமெரிக்காவில் 5,334 பேரும், பிரான்சில் 4,032 பேரும், சீனாவில் 3,318 பேரும், ஈரானில் 3,160 பேரும், இங்கிலாந்தில் 2,921 பேரும் பலியாகியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 760 பேரும், ஸ்பெயினில் 616 பேரும், இங்கிலாந்தில் 569 பேரும், அமெரிக்காவில் 232 பேரும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.