உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டியது.
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் பலி எண்ணிக்கை நாள்தோறும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனாவால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 71,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் 12,98,705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,72,837 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,40,179 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9,705 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அதிகபட்சமாக 15,887 பேர் உயிரிழந்த நிலையில் ஸ்பெயினில் 13,169 பேர், பிரான்சில் 8,078 பேர், பிரிட்டனில் 5,373 பேர், சீனாவில் 3,331 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.