இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின.
இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தார்கள். அதன்பிறகு, ஆவேசமடைந்த அவர்கள், மைதானத்திலிருந்து விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை நோக்கி பாட்டில்களை தூக்கி எறிந்தனர்.
இதனால் அங்கு பெறும் மோதல் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்தது, பெரும் கலவரமாக வெடித்தது. எனவே அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி எறிந்தார்கள். மக்கள் பதற்றமடைந்து அங்குமிங்கும் ஓடியதால், பலர் மூச்சு திணறி கீழே விழுந்தனர்.
அவர்கள், கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தற்போது வரை சுமார் 125 பேர் பலியானதாகவும், 323 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரியான மகுபுத் எம்.டி தெரிவித்ததாவது, இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை இன்னும் சில தினங்களில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேசிய காவல்துறையிடம் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.