சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணிகள் யாராவது தங்கம் கடத்தி வந்தார்களா என்று விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்துவந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தெரசா (45), பாத்திமா (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை.
இவர்கள் வயிற்றில் ஏதாவது வைத்து கடத்தி வந்தார்களா? என்று சோதனை செய்ய அம்புஜ் திரிபாதி, ரேணுகுமாரி என்ற சுங்க இலாகா அலுவலர்கள் இரண்டு பெண்களையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தீடிரென்று காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சுங்க இலாகா அலுவலர்களிடம் தகராறு செய்து இரண்டு பெண்களையும் அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் சுங்க இலாகா அலுவலர்கள் புகார் செய்தனர்.
பின்னர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு இலங்கை பெண்களும் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ’எங்களை காரில் அழைத்துச் சென்றது யார் என்றே தெரியவில்லை. ஏதோ பொடி தந்து சாப்பிட சொன்னார்கள். சாப்பிட்டதும் கழிவறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு எங்களை போலீஸ் நிலையத்தின் வாசலில் விட்டுச்சென்றனர்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கினர்.
கடத்தலில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கும் தொடர்பா?
விசாரணையில் சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை பெண்களை எக்ஸ்ரே எடுக்க அரசு மருத்துவமனைக்கு தானே அழைத்துச் செல்லவேண்டும். ஏன்? தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தகவல் கடத்தல் கும்பலுக்கு எப்படி கிடைத்தது? கடத்தல்காரர்களுக்கும் சுங்க இலாகாவில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் காவல் துறையினருக்கு எழுந்தது. இந்த கடத்தல் விவகாரம் குறித்து இரண்டு பெண்களிடமும், சுங்கத் துறை அதிகாரிகளிடமும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று தெரிகிறது