அரசு தொடக்கப் பள்ளிகளிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட்வகுப்பறைகளாக மாற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருக்கிறது.
ஆரம்பப்பள்ளிகளில் ஆடியோ, காட்சிசாதனங்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்றவற்றுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டங்களை வகுத்து உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக 200 தொடக்கப்பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். அதில் ஒவ்வொரு வகுப்பறையையும் மாற்ற சுமார் 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்குரிய பணம் சமக்ரா சிக்ஷா அபியான் வாயிலாக பெறப்படும் எனவும் புதுச்சேரி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தது. இதுகுறித்து புதுச்சேரி கல்வியமைச்சர் ஆ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தொடக்கப்பள்ளிகளை ஸ்மார்ட்வகுப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது இதற்காக நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இப்போது யூனியன் பிரதேசம் முழுவதுமுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி வகுப்பறைகள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வகுப்பறைகளாக இருக்கிறது. இதையே நடுநிலை மற்றும் தொடக்கப்ள்ளிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் வாயிலாக அனைத்து அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவோம். புதுச்சேரி அரசானது முன்பே பெங்களூரைச் சேர்ந்த விற்பனையாளருடன் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இதுபற்றி மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் ஏ.முத்தம்மா உயர்மட்ட விவாதத்தை நடத்தினார்.