பிளாக் ஷிப் நிறுவனமும், 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனமும் இணைந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விரைவில் பிளாக் ஷிப் டிவியில் தொடங்க இருக்கும் லவ் யூ யுவன் என்ற நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிபாடி சாதனை படைத்தனர்.
இது இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ,ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் போன்ற நிறுவனங்களால் உலக சாதனையாக உடனே அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 8ஆம் தேதி கோவை சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ் நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. விரைவில் வெளிவர இருக்கும் பிளாக் ஷிப் தொலைக்காட்சியின் லோகோ பிரம்மாண்டமாக யுவனால் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பிளாக் ஷிப் டிவியின் விளம்பரங்களுக்குரிய பிராண்ட் அம்பாசிடராகிறார் வைகைபுயல் வடிவேலு என்பதை தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டது.