கேரள மாநிலம் பீருமேட்டையில் கிருஷ்ணப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரு வந்தானம் கிராம பஞ்சாயத்தில் என்ஜினீயராக இருக்கிறார். இவருடைய சகோதரர் பெயர் கிருஷ்ணபிரசாத் ஆகும். திருமணத்துக்கு பின் முண்ட காயத்தில் தங்கியுள்ள கிருஷ்ணப்ரியா வருடந்தோறும் ஒவ்வொரு சர்வதேச சகோதரர்கள் தினத்தன்றும் (மே 24) தன் சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வருடம் வேலையின் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவரால் அண்ணனுக்கு கடிதம் எழுதமுடியவில்லை. அதன்பின் மற்றொரு நாளில் கிருஷ்ணப்ரியா, அண்ணனுக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.
அதன்படி தன்னுடைய பாசம், உறவு என கிருஷ்ணப்ரியா எழுதிய கடிதம் நீளமாக சென்றது. இதற்கென அவர் காகிதக் கட்டுக்குப் பயன்படுத்தப்படும் 15 ரோல்களை வாங்கி தன் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முடிப்பதற்கு அவருக்கு 12 மணிநேரம் ஆனது. அதன்பின் அந்த கடிதத்ததை கிருஷ்ணப்ரியா, தன் அண்ணனுக்கு அனுப்பி வைத்தார். தங்கையிடமிருந்து 5 கிலோ எடையில் வந்த பார்சலை பார்த்த கிருஷ்ணபிரசாத் பரிசுப்பொருளாக இருக்கும் என்று நினைத்து வாங்கி பிரித்துப்பார்த்தார். அப்போது அதில் கடிதம் மட்டுமே இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனிடையில் அக்கடிதத்தில் அவர்களின் உறவைப் குறித்து கிருஷ்ணப்பிரியா உணர்ச்சியுடன் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தை கிருஷ்ணபிரசாத் ஆர்வத்துடன் அளந்தபோது, அது 434 மீட்டர் நீளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதத்தை அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த யுனிவர்சல் ரெக்கார்ட் போரத்திற்கு அனுப்பினார். அதனை தொடர்ந்து அவர்கள் உலக சாதனையை உறுதிப்படுத்தினர். இவ்வாறு 5 கிலோ எடையில் 434 மீட்டர் நீளத்துக்கு சகோதரனுக்கு கடிதம் எழுதிய சகோதரியின் உலக சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.