கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் தயாரிப்பதை போலவே 80 கிலோ எடையுடைய பிளம் கேக் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக முந்திரி வகைகள், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, கிறிஸ்மஸ் பழம் உள்ளிட்ட உலர் ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவையை தயாரித்தனர். இந்நிலையில் 13 சமையல் கலைஞர்கள் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து சமையல் கலைஞர்கள் கூறியதாவது, தற்போது தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் மதுபானங்கள் அடங்கிய கலவையை 30 நாட்கள் பதப்படுத்தி வைப்போம். இதனையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்கள் முன்பாக அதனை எடுத்து, கலவையுடன் மாவு சேர்ந்து 80 கிலோவில் பிளம் கேக் தயாரிக்க போகிறோம் என தெரிவித்துள்ளனர்.