நாட்டில் தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்துவிட்ட நிலையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சி நிறுவனம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், மற்றும் வீடுகள் ஆகிய இடங்களில் ரோபோக்கள் வந்துவிட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பைபாஸ் சாலையில் ரோபோ டின்னர் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 8ஆம் தேதி அன்று அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி திறந்து வைத்தார்.
இங்கு உணவு ஆர்டர் செய்தால் பெண் ரோபோக்கள் உணவை பரிமாறுகின்றனர். இதுகுறித்து ரோபோ டின்னர் உணவகத்தின் மேலாளர் பாரத்குமார் ரெட்டி கூறியது, எங்கள் உணவகத்தில் ரோபோக்கள் மூலம் மட்டுமே உணவு பரிமாற்றம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து படி டேப் மூலம் உணவை ஆர்டர் செய்த சில நிமிடங்களில் ரோபோக்கள் உணவைக் கொண்டுவந்து பரிமாறுகின்றனர். உணவு பரிமாறுவதற்கு என்று 12 ரோபோக்கள் உள்ளன.
இதற்கான செலவு சற்று அதிகம் தான் இருந்தாலும் உணவு விரும்பியவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வண்ணமாக இந்த ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் இங்கு நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இதனைப் போலவே ஓங்கோலேவில் ஏற்கனவே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அதனை விரிவாக்கம் செய்வதற்கான உணவக உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் விளைவாகவே தற்போது திருப்பதியில் ரோபோ டின்னர் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.