திருக்குறளின் 1,330 குறட்பாக்களை பரதநாட்டியம் வாயிலாகவும், இசை, கவிதை, உரைநடை, பாட்டு மூலமாகவும் 12 மணிநேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை முயற்சி மயிலாடுதுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் உலகப்பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியானது இன்று காலை தொடங்கியது.
திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும், 21/2 வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பரத கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி நடனமாடினர். இசை, கவிதை, உரைநடை, பாட்டு போன்ற வடிவிலும், திருக்குறளை சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற, அதற்கு ஏற்ப முகபாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இச்சாதனை முயற்சி நடந்து வருகிறது.
இவற்றில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டியகலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி வருகின்றனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இச்சாதனை பதிவுசெய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பாக பரதநாட்டிய குரு கே.உமாமகேஸ்வரி தலைமையில் நடந்துவரும் இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுதும் இருந்து பரதநாட்டிய மாணவ, மாணவிகள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.