இந்தியா போக்குவரத்து துறையில் சிறந்து விளங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய அறிமுகம்தான் புல்லட் ரயில். இந்தியாவில் தற்போது பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், தேஜஸ், துராந்தோ என 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியவை ஆகும். ஆனால் இந்த அதிவிரைவு ரயிலான புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது ஆகும்.
எனினும் முழு வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படாது. இதன் காரணமாக புல்லட் ரயில் வாயிலாக 3 மணி நேரத்தில் 500 கிலோ மீட்டர் தொலைவில் நாம் கடக்க முடியும். அத்துடன் சுரங்கம், மேம்பாலம், கடலுக்கு அடியிலும் கூட அதே 320 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இந்த புல்லட் ரயில் போகும். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் அடிப்படையில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த புல்லட் ரயிலில் அதிகபட்சமாக 750 பேர் வரை பயணிக்கலாம். 1 மணி நேரத்தில் 3 ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி சுமார் 18 ஆயிரம் பேர் வரை பயணிக்கலாம்.
இப்போது இந்தியாவில் அமைய இருக்கும் புல்லட் ரயில் திட்டத்திற்கு 8 பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லி-வாரணாசி, டெல்லி- அகமதாபாத், டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி கொல்கத்தா என்று டெல்லியை மையப்படுத்தி 4 பாதைகளும், மும்பை-அகமதாபாத், மும்பை-ஹைதராபாத், மும்பை-நாக்பூர் என மும்பையை மையப்படுத்தி 3 பாதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் இருந்து அகமதாபாத் இடையில் இந்தியாவுடைய முதல் புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டது.
வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் இந்த பாதையில் புல்லட் ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை-மைசூர் இடையிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. சென்னை-மைசூர் இடையே 435 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாதையை புல்லட் ரயில் மூலம் கடக்க 2 1/2 மணி நேரம் மட்டுமே ஆகும் என்று கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை-மதுரை இடையிலும் புல்லட் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் மத்திய அரசும், மாநில அரசும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு சென்னை-மதுரை இடையில் புல்லட் ரயில் சேவை முடிவானால் திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும். தற்போது உள்ள பயணிகள் ரயில் வாயிலாக சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல குறைந்தது 8 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த புல்லட் ரயில் பாதை முடிவு செய்யப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு 3 மணி நேரத்தில் சென்று விடலாம். மேலும் இந்த புல்லட் ரயிலில் 500 கிலோ மீட்டருக்கான டிக்கெட் விலை கிட்டத்தட்ட 2,500 ரூபாய் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.