ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்திருக்கிறது. சென்ற 9ஆம் தேதி மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் தொடங்கப்பட்ட 6 நாள்களில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித்துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர்ப் புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல், பேனர்கள் அகற்றுதல் ஆகிய பணிகள் வழங்கப்படுகிறது.
18 -60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இவற்றில் பயிற்சியில்லாத தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய்.259, திறன்வாய்ந்த தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூபாய்.283 கூலியாக வழங்கப்படுகிறது. அத்துடன் நேரடியாக தொழிலாளர்களின் வங்கிகணக்குக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சம்பளம் செலுத்தப்படும். இதற்கென ராஜஸ்தான் அரசு, பட்ஜெட்டில் ரூபாய்.800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.