நாடாளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் 60 வயதை கடந்தவர்கள் சீனியர் சிட்டிசன்கள் என்றும், 80 வயதை தொட்டவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதித்துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த திட்டம் என 2 திட்டங்கள் இருக்கிறது.
இதில் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்காக காப்பகங்கள் அமைக்கப்பட்டு அதில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் போன்றவைகள் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற மற்றும் உடல் நலம் குன்றிய, மனநலம் குன்றிய சீனியர் சிட்டிசன்களுக்கு தேவையான கருவிகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு இணையதளம் மூலமாக சீனியர் சிட்டிசன்களுக்கு தேவையான தீர்வுகளை கொண்டு வருவதற்காக தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்திரா காந்தி தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 முதல் 79 வயது உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம் 200 ரூபாய் பென்ஷனும், 80 வயதை தொட்டவர்களுக்கு மாதம் 500 ரூபாய் பென்ஷனும் வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 14567 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.