சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பயணிகள் இடையே மெட்ரோ ரயில் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தினால் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணித்துக் கொள்ள முடியும்.
இதேபோன்று ரூபாய் 50 கட்டணம் செலுத்தி பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் செல்லலாம். இந்த பயண அட்டையை உங்களுடைய பயணம் முடிவடையும்போது மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் ஒப்படைத்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் பயண அட்டையை உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோன்று ரூபாய் 2500 பணம் செலுத்தி மாதம்தோறும் பயணம் செய்யும் கட்டண சலுகையையும் பெற்றுக்கொள்ளலாம். அதோடு ரூபாய் 50 செலுத்தி பயண அட்டையைப் பெற்றுக் கொண்டு விருப்பம் போல் செல்லலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமானது, வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள், கொரியர் நிறுவனத்தினர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நாள்தோறும் 2 வழித்தடத்தில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு 42 ரயில்கள் காலை 5 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.