Categories
தேசிய செய்திகள்

துட்டு இல்ல… “சாப்பாட்டுக்கு வழியில்ல”… சைக்கிளிலேயே உ.பி செல்லும் வட மாநிலத்தவர்கள்!

வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் உணவு, பணம் இல்லாததால் சைக்கிளிலேயே கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பணிநிமித்தம் இடம்பெயர்ந்தவர்கள் உண்ண உணவின்றி வேலை இன்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

அடுத்த ஊரில் பசிக் கொடுமையினால் இறப்பதை விட சொந்த ஊருக்கே சென்று விடலாமென நடை பயணத்தை தொடங்கி விட்டனர். அவ்வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த மோகன் சர்மா, தேவேந்திர சிங், ஜியேந்திர சிங், அஜித் சிங் ஆகியோர் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நால்வரும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதமாக உண்ண உணவின்றி வருமானமின்றி பசியுடன் நாட்களை நகர்த்தி உள்ளனர்.

ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத பொழுது வீட்டு வாடகை எவ்வாறு கொடுக்க முடியும் என்பதால் நான்கு பேரும் சொந்த ஊருக்கு போக முடிவு செய்துள்ளனர். இதனால் வேலை பார்த்து சேமித்து வைத்த பணத்தில் நான்கு சைக்கிள்களை வாங்கிக்கொண்டு கடந்த 29ஆம் தேதி காலை கேரளாவிலிருந்து புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நான்கு பேரும் சென்ற பொழுது அவர்களை கண்ட தன்னார்வலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கேரள மாநிலத்தில் வேலை செய்ததும் தங்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு திரும்பி உள்ளதையும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேருக்கும் உணவு கொடுத்து உள்ளனர் தன்னார்வலர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் வெகு தூரம் கடந்து வந்த நான்கு பேரும் வயிறார உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் தன்னம்பிக்கையுடன் உத்தரபிரதேசம் நோக்கி கிளம்பினார். இவர்களைப் போன்ற தொழிலாளிகளின் நிலைமையை உணர்ந்து அரசு அவர்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |