விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டமில்லாமல் ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது , இவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி , இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு , நேரடியாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். ஆனால் பயிற்சி போட்டியில் விளையாடாமல் இருப்பது, இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் , தேர்வாளருமான திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அணியின் கேப்டன் விராட் கோலி நீண்டகாலமாகவே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதோடு உலகில் தலை சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த பார்மில் இருக்கின்றனர். இருந்தாலும் இருவருக்கும் போதுமான பயிற்சி இல்லாதது , இவர்களின் லெவல் ஆட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. தற்போது நியூசிலாந்து அணி ,இங்கிலாந்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக , இரண்டு அல்லது மூன்று போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும். அவ்வாறு விளையாடினால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதற்கு சாதகமாக அமைந்து இருக்கும்”, என்று அவர் கூறினார்.