Categories
உலக செய்திகள்

உலகை உலுக்கிய வூஹான் நகரில் என்ன நடக்கிறது?… இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்!

வூஹான் நகரில் தொற்று பரவியது முதல் கட்டுக்குள் கொண்டுவந்தது வரை வூஹான் வாழ் இந்தியர்கள் மனம் திறந்து பேசியுள்ளனர் 

சீனாவில் சிறப்பு மிக்க நகரமாக இருந்து வந்தது வூஹான் நகரம். தலைசிறந்த கல்வி நிலையங்களும், தொழில் துறைகளும், ஆய்வுக் கூடங்களும் அந்நகரிலேயே இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வூஹான் நகருக்கு மேற்படிப்பிற்காக ஏராளமான மாணவர்கள் வருவதுண்டு. 2018 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசியதும் வூஹான் நகரில் தான்.

கொரோனாவின் சின்னம்

இத்தனை சிறப்பு மிக்க வூஹான் நகரம் இப்போது கொரோனா தொற்றின் சின்னமாக மாறியுள்ளது. வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து உலகில் பல நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்தது. இதனையடுத்து மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து வூஹான் நகருக்கு வந்த 600 மாணவ மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் துணிச்சல்மிக்க சில மாணவ மாணவிகள் இன்றும் வூஹான் நகரிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில் வூஹான் என்று கூறினாலே பல லட்சம் உயிர்களை எடுத்த கொரோனா தொற்றுதான் அனைவரது கண் முன்னே வந்து செல்கின்றது.

வூஹான் நகரில் ஊரடங்கு

அந்நகரில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து சுமார் 76 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து வூஹான் நகரில் இருந்த கடைசி கொரோனா தொற்று நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார். ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தாலும் இன்னும் வூஹான் நகர மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதிலும் சமூக விலகளிலும் தீவிரமாக இருக்கின்றனர்.

அறிகுறிகள் ஏதும் இன்றி தாக்கும் கொரோனா தொற்றினால் அச்சமடைந்துள்ளனர். பணி நிமித்தமாகவும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர் அந்நகர மக்கள் என இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

அறிகுறி இல்லாத பாதிப்பு  

சீனாவைப் பொறுத்தவரை 40 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் வெளிநாட்டு தொடர்புடையவர்கள். மேலும் 997 பேர் அறிகுறிகள் ஏதும் இன்றி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 130 பேர் வெளிநாட்டு தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வூஹான்  நகரைத் தலைநகரமாகக் கொண்ட ஹூபேய் மாகாணத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் உள்ள நிலவரத்தின்படி 559 பேர் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வூஹான் நகர இந்தியர் கூறுகையில் “அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா தாக்குவது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக ஏற்படும் இந்தத் தாக்கம் மக்கள் மனதில் அச்சத்தை அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார். இதன் காரணமாகவே அதிகாரிகள் இன்னும் வூஹான் நகர மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கச்சொல்லி வருகிறார்கள் போலும்.

தொடர் பரிசோதனை  

வூஹான் நகரில் இருந்த கொரோனா தொற்று நோயாளிகள் அனைவரும் குணமாகி இருந்தாலும் உலகைவிட்டு கொரோனா இன்னும் முழுதாக போகவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து வூஹானில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் கூறியபொழுது “இன்னும் வுஹான் நகரில் அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவுவதை கண்டுபிடிக்க நியூக்ளிக் அமிலம் சோதனையைப் பயன்படுத்தி வருகிறார்கள். தொற்றிலிருந்து இருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது” எனக் கூறியுள்ளார்.

வூஹான் வாழ் இந்தியர்கள்

அது மட்டுமில்லாமல் வூஹான் நகரில் இருக்கும் இந்தியர்கள் தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அவர்களின் குடும்பம், நண்பர்கள், உறவினர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற அச்சம் தான் இந்த கவலைக்கு காரணம் ஆகும். இதுபற்றி வூஹான் வாழ் இந்தியர் ஒருவர் கூறுகையில் “ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் என்னைப் பற்றி எனது குடும்பம் கவலைப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நான் எனது குடும்பத்தை பற்றி நினைத்து கவலைப் படுகிறேன். அதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா

வூஹான் இந்திய விஞ்ஞானி ஒருவர் இந்தியா குறித்து பேசிய பொழுது “சில மாநிலங்களை தவிர்த்து இந்தியாவை பார்த்தால் அவர்கள் உச்சகட்ட கொரோனாவின் தாக்கத்தை கடந்து விட்டதாக தான் தெரிகின்றது. இது எப்படி நிகழ்ந்தது என குழப்பமாக இருந்தாலும் ஊரடங்கு இதற்கு முக்கிய காரணமென கூறலாம்” என கூறியுள்ளார்.

கொரோனா குறித்த சர்ச்சை பற்றி மற்றொரு வூஹான் வாழ் இந்தியரிடம் கேட்ட பொழுது முதலில் கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவோம். பின்னர் தொற்று குறித்த சர்ச்சையை பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |