ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பராமரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள கபார்செனோ என்ற தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் அந்த பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த யானைக்கு மதம் பிடித்ததால், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயது பராமரிப்பாளர் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தரையில் அடித்து, தூரமாக தூக்கி வீசியது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பராமரிப்பாளருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் 31 வருடங்களாக இந்த பூங்கா செயல்பட்டு வருகிறது, ஆனால் இதுவரை இந்த மாதிரியான ஒரு சம்பவம் இங்கு நடந்ததே இல்லை என்று சக பணியாளர்கள் கூறுகின்றனர்.