Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை… கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொது மக்கள்…!!

கோயம்புத்தூரில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் வயலில் சட்டவிரோதமாக அமைத்த  மின் வேலியில் சிக்கி 22 வயது ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி நேரடியாக மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த துரை மற்றும் நிலத்தின் உரிமையாளர் ரவி மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தலைமறைவான  இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த யானையை வனத்துறையினர் யானைகள் முகாமிற்கு எடுத்து சென்றனர். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள் உயிரிழந்த  யானைக்கு இளநீர், பால் , திருநீறு, மஞ்சள், குங்குமம் தெளித்து வேட்டி, துண்டு அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானையை  நாங்கள்  ஆண்டவன் என்றே அழைப்போம். விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து விட்டால் அதனை விரட்ட பட்டாசு வெடிப்பதில்லை. இதே  முறையை தான் நாங்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்தோம். இதனால்  ஆண்டவன் எங்களுக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவித்ததில்லை  ஆனால் தற்போது யானை உயிரிழந்ததை அபசகுணமாக கருதுகிறோம்” என்று தெரிவித்தனர்.

Categories

Tech |