மத்திய அரசின் ஆதார விலையை விட பருத்தி அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 4,556 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைசெய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி செம்பனார்கோவில் விற்பனைக் குழு செயலாளரான ரமேஷ் தலைமையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,500 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதை நிறுத்த இந்த ஏலத்தில் தஞ்சாவூர், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஏலத்தில் மத்திய அரசின் அதிகபட்ச விலையான ரூபாய் 5,825 விலையை விட பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 7, 339 விலை போனது. இதனால் இந்த ஏலத்தில் ரூபாய் 2 கோடி மதிப்புடைய பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது,” விற்பனைக் கூடத்தில் பருத்தி அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் அவற்றை திறந்தவெளியில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டையை பாதுகாப்பாக வைக்க கூடுதல் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் “என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர் .