பூடான் உடனான எல்லைப் பிரச்சனை இதுவரை தீராத நிலையில் சீனா தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது.
சீன நாடு சில நாட்களாகவே இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூடான் நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவினை சில நாட்களுக்கு முன் சொந்தம் கொண்டாடிய நிலையில் பூடான் அதனை நிராகரித்து விட்டது. மேலும் எல்லைப் பிரச்சனையை பற்றி பூடான் மற்றும் சீன நாடு 24 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இப்பிரச்சினை தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று அவர் கருத்துக்களை கூறினார்.
பூடானுடனான எல்லையானது தற்போது வரை வரையறுக்கப்படாத நிலையில், எல்லையில் உள்ள மத்திய பகுதியிலும், கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளிலும் பிரச்சனையானது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரச்சினையை தீர்ப்பதற்கான தொகுப்பு தீர்வு ஒன்றினை சீனா முன் வைத்திருக்கின்றது. இது குறித்து சர்வதேச அரங்குகளிடம் பேசாமல் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே சீனா விருப்பம் கொள்கிறது என வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.