இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு அஞ்சி சில பொதுமக்கள் தங்களுடைய சொந்த இடத்தை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் காலியாக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் வேறு சிலர் அபகரித்து அங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது உள்நாட்டு யுத்தம் சிறிதளவு குறைந்ததால் வேறு பகுதிக்கு சென்ற பொதுமக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு திரும்பிய பொதுமக்கள் தங்களுடைய நிலங்களையும், வீடுகளையும் அபகரித்தவர்களிடம் கேட்கும்போது இருதரப்பினருக்குமிடையே உரிமை சண்டை ஏற்படுகிறது. அதன்படி தெற்கு டர்பர் மாகாணத்தின் பழங்குடியின மக்களுக்கும், அரபு மக்களுக்குமிடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ்வபோது துப்பாக்கிச் சூட்டையும் நடத்துகின்றனர். இதுவரை இந்த மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலை போல் மீண்டும் நடைபெறாமலிருக்க அந்நாட்டு அரசாங்கம் டர்பர் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரை குவித்துள்ளது.