விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், கவி மற்றும் ஜெகதீஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலிகால் பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு இவர்கள் புத்தாண்டை கொண்டாட வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ் கால் தவறி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கவி தம்பியை காப்பாற்ற தண்ணீரில் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து ஏரியில் மூழ்கி கொண்டிருந்த கவி கூச்சலிட்டதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் கவி தனது தம்பி ஜெகதீஷ் தண்ணீரில் மூழ்கியதை அவர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கி ஜெகதீஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் ஜெகதீஷ் உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.