பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், சிறுநீரகப் பிரச்சினையால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து தீவன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற லாலு பிரசாத் ஜாமினில் வெளியே வந்த போது பலமுறை சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் லாலு பிரசாத் தொடர்ந்து சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால் அவருடைய சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக லாலு பிரசாத்தின் மகள் ரோஷினி ஆச்சாரியா தன்னுடைய தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு தற்போது முடிவு செய்துள்ளாராம். மேலும் இந்த தகவலை லாலு பிரசாத்தின் நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது ரோஷினி ஆச்சாரியா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடைய தந்தைக்கு சிறுநீரகத்தை நான் தானமாக வழங்க போகிறேன் என்று பரவிய தகவல் உண்மைதான். இதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று என்று கூறியுள்ளார். இந்த மாதத்தின் இறுதியில் லாலு பிரசாத் யாதவ்க்கு சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ரோஷினி தன்னுடைய டுவிட்டரில் நீங்கள் இந்த நாட்டுக்கு கண்டிப்பாக தேவை. உங்களால் நாடு கொடுங்கோல் சிந்தனையை எதிர்த்து போராடும் என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.